துாய்மை பணியாளர்களிடம் குறைகேட்பு நிகழ்ச்சி
வால்பாறை: வால்பாறை நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நடந்தது. வால்பாறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது.தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரிய தலைவர்ஆறுச்சாமி பங்கேற்றார். நிகழ்ச்சியில், துாய்மை பணியாளர்கள் பேசுகையில், 'ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களை நகராட்சி பணியாளர்களாக மாற்றி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும். எங்கள் குழந்தைகளுக்கு, தகுதியின் அடிப்படையில் நகராட்சியில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்,' என்றனர். தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி பேசும் போது, ''வால்பாறை மலைப்பகுதியில் பல்வேறு சிரமத்திற்கு இடையே பணிபுரியும் துாய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும். குறிப்பாக, பணி நிரந்தரம், கூலி உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முதல்வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் நல்ல தீர்வு காணப்படும்,'' என்றார்.