தடுப்பணையில் கலக்கும் கழிவு நீரால் நிலத்தடி நீருக்கு ஆபத்து! தூய்மைப்படுத்த கூடலூர் நகராட்சி முடிவு
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் செல்லும் வழியில் உள்ள தடுப்பணையில் கழிவு நீர் கலப்பால், நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை தூய்மைப்படுத்த, கூடலூர் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை அருகே தடுப்பணை உள்ளது. பருவ மழை காலங்களில் பாலமலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழை நீர், வெள்ளமெனப் பெருகி, அதில் உள்ள ஒரு பகுதி தண்ணீர், நாயக்கன்பாளையம் வழியாக இத்தடுப்பணையை வந்து அடைகிறது. இதனால் நாயக்கன்பாளையம், கூடலூர் கவுண்டம்பாளையம், பாரதி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் பெருகி, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பயன் விளைந்தது. ஆனால், சமீப காலமாக இந்த தடுப்பணைக்கு வந்து சேரும் நீரில், கழிவுநீர் கலப்பதால் தடுப்பணையில் சேரும் நீர் முழுவதுமாக மாசடைந்து, இப்பகுதி நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், இத்தடுப்பணையையொட்டி உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் 'குடி'மகன்கள், தடுப்புச் சுவர் இல்லாத தடுப்பனையில் போதையில் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதே போல தடுப்பணையை கடந்து செல்ல உதவும் சிறிய பாலத்தில், பெரும்பாலான இடத்தில் தடுப்பு சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மற்றும் மழைக்காலத்தில் நடந்து செல்பவர்கள் தடுப்பணையில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இப்பிரச்சினையை தீர்க்க பாலத்தின் இரு பக்கமும் உயரமான தடுப்பு சுவர் எழுப்ப வேண்டும். தடுப்பணையில் கழிவு நீர் சேருவதை தடுத்து நிறுத்தி, நிலத்தடி நீர் மாசடையும் பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும். இது குறித்து கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு கூறுகையில்,பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்தடுப்பணையில் கழிவு நீர் கலப்பதால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக பொதுப்பணி துறையின் உரிய அனுமதியுடன் தடுப்பணையில் உள்ள கழிவு நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதோடு தடுப்பணைக்கு வரும் தண்ணீரில் கழிவு நீர் கலப்பை தடுக்க, பொது மக்களிடையே உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தடுப்பணையை கடந்து செல்லும் பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு, புதிதாக, அகலமான பெரிய பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.