மேலும் செய்திகள்
'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் தமிழகத்தில் அதிகரிப்பு
02-Jan-2025
மேட்டுப்பாளையம்; செல்லப்பிராணிகளை தொட்டு விளையாடுபவர்கள், விவசாய பணி செய்பவர்கள் உண்ணியால் கடி பெறுவதன் மூலம் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என காரமடை வட்டார சுகாதார துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.தமிழகத்தில், சில மாவட்டங்களில், அதிக அளவில், 'ஸ்க்ரப் டைபஸ்' எனப்படும் உண்ணிக் காய்ச்சல் பரவல் உள்ளது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை சுற்றுவட்டார பகுதிகளில், காரமடை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதாகர் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் குழுவினர் பொதுமக்களுக்கு உண்ணிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, காரமடை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன் கூறியதாவது:-உண்ணிக் காய்ச்சலானது எலி, அணில், பெருச்சாளி. செல்லப் பிராணிகளான நாய், பூனை, வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, போன்ற கால்நடைகளின் உடலில் வளரும் உண்ணிகள் அல்லது மண்ணில் உள்ள உண்ணிகள் கடிப்பதன் மூலம் பரவும் தன்மை கொண்டது. எனவே, செல்லப்பிராணிகளை தொட்டு விளையாடுபவர்கள், மண்ணில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.இந்த நோய் ஏற்பட்டால், காது மடல், அக்குள் உள்ளிட்ட உடலின் மறைவான பகுதிகளில் தடிப்புகள், கொப்புளங்கள் அல்லது சொரி ஏற்படும். அதைத் தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு ஏற்படும். இந்த அறிகுறிகள் கண்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.ஆரம்பகட்டத்திலேயே இதைக் கண்டறிந்தால், எளிதாக மாத்திரைகள் வாயிலாகவே நோயை உடனடியாக குணப்படுத்த முடியும். சரியாக கவனிக்காவிட்டால், உடலின் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வயல்களில் வேலை செய்து முடித்து வீடு திரும்பியபின் சுடுநீரில் குளியல் சோப்பினை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.காரமடை வட்டார பகுதிகளில் உண்ணிக்காய்ச்சல் பாதிப்புகள் தற்போது இல்லை. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
02-Jan-2025