உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் பெருக்கெடுத்த மழை வெள்ளம்; ரேஷன் கடையில் பொருட்கள் சேதம்

ரோட்டில் பெருக்கெடுத்த மழை வெள்ளம்; ரேஷன் கடையில் பொருட்கள் சேதம்

பொள்ளாச்சி நகரில், நேற்று பெய்த கனமழையால், வெயிலின் தாக்கம் தணிந்து குளிரான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், நேற்று முன்தினம் காலை மழை பெய்தது. நேற்று, காலை முதல் மதியம் வரை அவ்வப்போது மேகமூட்டம் இருந்தாலும், வெயிலின் தாக்கமும் இருந்தது.அதன்பின், மதியம், 2:00 மணியளவில், நகர் நீங்கலாக, சுற்றுப்பகுதியில் மழை பெய்யத் துவங்கியது. அதேநேரம், நகரில், மாலை, 4:00 மணிக்கு, திடீரென காற்றுடன் கனமழை பெய்தது.கனமழையால், பள்ளிகளில் வகுப்புகள் முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவர்கள் தவித்தனர். இதேபோல, டூ வீலர்களில் பயணித்தவர்கள், பாதசாரிகள் உள்ளிட்டோர் ரோட்டோரம் இருந்த கடைகளில் தஞ்சமடைந்தனர்.கடந்த சில நாட்களாகவே, வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், நேற்று பெய்த கனமழையால், குளிரான சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மக்கள் அவதி

இந்நிலையில், பெள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், திருப்பூர், கரூர் வழித்தடம் நோக்கி நிறுத்தப்படும் ரேக்குகளில், நிழற்கூரை இல்லாத காரணத்தால் மழையின்போது, ஒதுங்க முடியாமல் மக்கள் திணறினர். அருகே இருந்த கடைகளில், கூட்டமாக பயணியர் நின்றனர்.

மழையால் பாதிப்பு

பொள்ளாச்சியில் பெய்த மழை காரணமாக, கரியகாளியம்மன் கோவில் வீதியில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. திருநீலகண்டர் வீதியில் உள்ள ரேஷன் கடையில், தண்ணீர் புகுந்ததால், அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதமானது.நந்தனார் காலனியில் மழையின் காரணமாக வீடுகளின் முன் கழிவுநீருடன் கலந்து மழைநீரும் சென்றது. பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு, தேர்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழைநீர் வெள்ளமாக ஓடியது. இதனால், போக்குவரத்து பாதித்தது.

உடுமலை

உடுமலை பகுதிகளில், கடந்த இரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், நேற்று மதியம், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர் சீதோஷ்ண நிலை காணப்பட்டது. கோடை மழையால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ