தொழில்முனைவோருக்கு இதோ நல்லதொரு வாய்ப்பு
கோவை: உணவுத் துறை சார்ந்த தொழில்முனைவோராக விரும்புவோரும், தொழிலை விரிவுபடுத்த விரும்புவோரும் பயன்பெறும் வகையில், கோவை கொடிசியாவில் 3 நாள் உணவுத்துறை கண்காட்சி வரும் ஜூலை 2ம் தேதி நடக்கிறது.கண்காட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு, பி அண்டு எஸ் நிறுவன தலைவர் பிரியங்கா கார்த்திகேயனி பேசுகையில், “உணவுத் துறை சார்ந்த தொழிலைத் தொடங்க விருப்பமுள்ளவர்கள், ஏற்கனவே இத்துறையில் இருப்பவர்கள், தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கு இக்கண்காட்சி சரியான இடமாக இருக்கும். இத்துறை சார்ந்த வழிகாட்டல், தொழில்நுட்பம், புதிய வரவுகள் என அனைத்துவிதமான தரவுகளும், ஒரே கூரையின் கீழ் கிடைக்கும்,” என்றார்.கண்காட்சியை நடத்தும் சினர்ஜி எக்ஸ்போஷர்ஸ் இயக்குநர் பிரிஜேஷ் எட்வர்ட்ஸ் கூறியதாவது:சமையல் வணிகங்களுக்கான உணவு, உணவு பதனிடல், பால் பொருட்கள், ஹோட்டல், உணவு தயாரிக்கும் இயந்திரங்கள், பானங்கள், பேக்கரி, இடுபொருட்கள், சேமிப்புக்கிடங்கு, குளிர்பதனம், நொறுக்குத் தீனிகள், பேக்கிங், உணவுப்பாதுகாப்பு, தொழில்நுட்பம் என, உணவு சார்ந்த அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய கண்காட்சியாக இது நடக்கிறது.பல்வேறு நாடுகளில் இருந்து, பிரபல பிராண்டுகள் பங்கேற்கின்றன. 300க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. அனுமதி இலவசம். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகம், தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் உட்பட, ஏராளமான உணவுத்துறை அமைப்புகள், சினெர்ஜி துணைத் தலைவர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.