அரவான் கோவில் திருவிழா நடத்த ஐகோர்ட் அனுமதி
கோவை; குறிச்சி அரவான் கோவில் திருவிழா நடத்த, ஐகோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது. கோவை, குறிச்சியில் பழமை வாய்ந்த அரவான்- பொம்மி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் திருவிழா விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால், கடந்த மூன்று ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இதனால், போலீஸ் பாதுகாப்புடன் திருவிழா நடத்த அனுமதிக்கக் கோரி, குறிச்சி அனைத்து சமுதாய ஒருங்கிணைந்த பெரியதனக்காரர் கூட்டமைப்பு சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் அளித்த உத்தரவு: திருவிழா நடத்த பாதுகாப்பு வழங்க கோரி, மனுதாரர் இந்நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்துள்ளார். திருவிழா நடத்துவது தொடர்பான மேல்முறையீட்டு மனுவில், கோட்டாட்சியர் விசாரணை நடத்த ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனவே, கோவை தெற்கு கோட்டாட்சியர் முன்னிலையில் இரு தரப்பினர் ஆஜராக வேண்டும். இரு தரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டால், விழாவை இணக்கமாக நடத்த வேண்டும். கோட்டாட்சியர் முடிவை ஏற்க விரும்பாத பட்சத்தில், திருவிழாவை மதுக்கரை தாசில்தார் நடத்த வேண்டும். விழாவுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு, நீதிபதி தெரிவித்துள்ளார். ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வரும் நவ.,4 முதல், 14ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.