அரசு கலை கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டல் முகாம்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், உயர்கல்வி வழிகாட்டும் முகாம் நடந்தது. இதில் பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ.,யில் சேர்ந்தனர். 'நான் முதல்வன் உயர்வுக்கு படி' என்ற திட்டத்தின் கீழ், 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி தவறிய மாணவர்களுக்கான, உயர்கல்வி வழிகாட்டு முகாம், மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.கல்லூரி முதல்வர் கானப்பிரியா தலைமை வகித்தார். காரமடை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மைதிலி வரவேற்றார். முகாமுக்கு வந்த மாணவ, மாணவிகளை அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், சான்றிதழ்களை சரிபார்த்து, தகுதியானவர்களை அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்த்தனர். தேர்ச்சி பெறாதவர்களை ஐ.டி.ஐ., யில் (தொழிற்பயிற்சி நிறுவனம்) சேர்த்தனர். ஒரு மாற்றுத் திறனாளி மாணவி உட்பட, பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் புதிதாக சேர்ந்தனர். முகாம் ஏற்பாடுகளை காரமடை வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பாலமுருகன், சிறப்பு ஆசிரியர்கள் ரேவதி, ஜெய்பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலைச்செல்வி, மோகன் குமார் உட்பட கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.