ஆனைமலையில் கல்லுாரி துவங்க மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட மாநாடு, வங்கி ஊழியர் சங்கத்தில் நடந்தது. நிர்வாகி வேலுச்சாமி தலைமை வகித்தார். சண்முகம் வரவேற்றார். மூன்றாண்டு கால வேலை அறிக்கையை, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் பரமசிவம் வாசித்தார். புதிய மாவட்ட குழு தேர்வு நடந்தது. மாவட்ட தலைவராக வேலுச்சாமி, செயலாளராக கருப்புசாமி, பொருளாளராக மணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுச் செயலாளர் பழனிசாமி, நிர்வாகி ஆறுச்சாமி பேசினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சரவணன் நிறைவுரையாற்றினார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில், ஏழை, எளிய பழங்குடியின மாணவர்கள் மேற்கல்வி பயிலும் விதத்தில் அரசு கல்லுாரி, அரசு தொழில்நுட்பக் கல்லுாரி துவங்க வேண்டும். நவமலை, பாண்டியன்பதி, ஆழியாறு அன்பு நகர், தெற்கோட்டு வாய்க்கால், போன்ற பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டாவும், தரமான வீடுகளையும் கட்டித் தர வேண்டும். உலாந்தி வனச்சரகத்தில் தற்போது கட்டப்படும் வீடுகளின் கட்டுமானப் பணிகள் தரமற்றவையாகவும், அளவு குறைபாடுடன் உள்ளதால், அதிகாரிகள் முன் நின்று கட்டிக்கொடுக்க வேண்டும். கோவை மாவட்டம் முழுதும் உள்ள பழங்குடியின மக்கள் அனைவருக்கும் நலவாரிய அட்டைகள் வழங்கி, வாரிய பலன்களை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.