வீடு போக்கியத்திற்கு தருவதாக ரூ.4 லட்சம் மோசடி: வீட்டு உரிமையாளர் கைது
கோவை; வீடு போக்கியத்திற்கு தருவதாக சமையல்காரரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த வீட்டு உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர்.கோவை, ராமநாதபுரம் அருகே உள்ள புலியகுளம், பெரியார் நகரை சேர்ந்தவர் தேவா என்ற தியாகராஜன், 40; என்.எஸ்.ஆர்., ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சமையல்காரர். இவருக்கு புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம், 38, என்பவர் அறிமுகமானார்.அவரிடம், தியாகராஜன் போக்கியத்திற்கு வீடு இருந்தால் தெரிவிக்கும் படி கூறியுள்ளார். அப்போது ஹக்கீம் தனது வீட்டை, 11 மாதத்திற்கு போக்கியத்திற்கு தருவதாகவும் அதற்கு ரூ.4 லட்சம் கொடுக்கும் படியும் கேட்டுள்ளார். இதையடுத்து தியாகராஜன் கடந்த செப்., மாதம் ரூ-.4 லட்சத்தை ஹக்கீமிடம் கொடுத்துள்ளார்.அதன்பின் போக்கியத்திற்கு தருவதாக கூறி இருந்த வீட்டிற்கு, தியாகராஜன் சென்று பார்த்த போது அங்கு வேறொரு குடும்பத்தினர் தங்கியிருந்தனர். இதுகுறித்து தியாகராஜன், ஹக்கீமிடம் கேட்டபோது அவர் சரியான பதில் கூறாமல் காலம் தாழ்த்தி வந்தார்.இதனால் தியாகராஜன் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஹக்கீம் பணம் தர மறுத்துள்ளார். தியாகராஜன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து ஹக்கீமை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.