பனை நாற்று, விதை பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
ஆனைமலை; ஆனைமலையில், தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு பனை நாற்றுகள், பனை விதைகள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் அறிக்கை வருமாறு: ஆனைமலை வட்டாரம் தோட்டக்கலைத்துறையில், நடப்பாண்டு பனை பயிரினை விவசாய வயல்களில், வரப்புகளில் நடவு செய்து பனை உற்பத்தியை ஊக்குவிக்க, பனை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பனை நாற்றுகள், பனை விதைகள் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய இத்திட்டம் பெறப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் இரண்டாயிரம் பனை விதைகள், மற்றும் 15 பனை நாற்றுகள், என, இலக்கு பெறப்பட்டுள்ளன. ஒரு விவசாயிக்கு அதிகப்படியாக, 50 பனை விதைகள் அல்லது 10 பனை நாற்றுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள், சிட்டா, ஆதார் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வந்து முன்பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.