தீபாவளிக்கு ஹோட்டல்கள் லீவு :வெளியூர் மக்கள் அவஸ்தை
கோவை: கோவை மாநகர பகுதிகளில், பிரபல ஹோட்டல்கள் மட்டுமின்றி சிறிய ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடைகள் ஏராளமாக உள்ளன. ஹோட்டல்களில் பெரும்பாலும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகம் பணிபுரிகின்றனர். நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை காரணமாக இரு நாட்களுக்கு முன்பே ஹோ ட்டல் ஊழியர்கள் பலர், சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால், பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு வாரம் வரை சில ஹோட்டல்கள் மூடப்படும் நிலையில், வெளியூரில் இருந்து வந்து கோவையில் வசிப்பவர்கள், உணவு கிடைக்காமல் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தள்ளுவண்டி கடைகளை நம்பியிருப்பவர்கள், உணவின்றி தவிக்கின்றனர். காந்திபுரம், காட்டூர், சிங்காநல்லுார், குறிச்சி 'சிட்கோ' போன்ற இடங்களில் தொழிற்சாலைகள், ஒர்க்ஷாப்கள் அதிகம் உள்ளன. ஹோட்டல்கள் தொடர் விடுமுறையால், உணவுக்காக அலைய வேண்டியுள்ளதாக, இங்கு பணிபுரியும் வெளி மாநில, வெளி மாவட்ட தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.