பொருட்களின் தரம் எப்படி; புத்தகங்கள் வழியாக பாடம் : மாணவர்களிடம் அறிவியல் உணர்வை வளர்க்கும் புதிய முயற்சி
கோவை: இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) சார்பில், 'தரநிலைகள் வழியே அறிவியலை கற்றல்' என்ற தலைப்பில் 52 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புத்தகங்கள், தமிழ் வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்காக தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, இலவசமாக வழங்கப்படவுள்ளன. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கோவை கிளை சார்பில், கோவையில் உள்ள 18 பள்ளிகளில் - 11 அரசு, 3 அரசு உதவிபெறும் மற்றும் 4 தனியார் பள்ளிகளில் தரநிலை மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மன்றங்கள், பி.ஐ. எஸ் உடன் இணைந்து மாணவர்களுக்கு அறிவியல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் அந்த பொருட்களின் தரங்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், 52 புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ் மொழியிலும் இவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, மாணவர்களிடையே அறிவியல் விதிகள் மற்றும் கோட்பாடுகளில் ஆர்வத்தை தூண்டும். பால்பாயின்ட் பேனா, கால்பந்து, ஹெட்போன்கள் போன்று நாம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள அறிவியல் மற்றும் தரக் கட்டுப்பாடுகள் குறித்து, 16 பக்கங்களுடன் விரிவாக இந்த புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் மட்டுமல்லாமல், கல்லூரிகளிலும் இந்த மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. பி.ஐ.எஸ் சார்பில் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கோவை கிளை இயக்குனர் மற்றும் தலைவர் பவானி கூறுகையில், கோவை மட்டுமல்லாமல், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட 16 மாவட்டங்களில் கோவை கிளை சார்பில் தரநிலை மன்றங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படுகின்றன. இந்த முயற்சி மாணவர்கள் மத்தியில் அறிவியல் அறிவையும், தரமான தயாரிப்புகளின் அவசியத்தையும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்,'' என்றார்.