நெஞ்சு பொறுக்குதில்லையே வாயில்லா ஜீவனை நினைத்தால்!
கோவை : தெரு நாய்களால் அச்சுறுத்தல் ஒருபுறம் இருந்தாலும், அவை தாக்கப்பட்டு ரண வேதனையுடன் சுற்றுவதாக, விலங்குகள் நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கோவை மாநகராட்சி பகுதிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது. நாய்களை கொல்வதற்கு தடை இருப்பதால், அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் பாதிப்புகளை தவிர்க்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, உக்கடம், ஒண்டிப்புதுார், வெள்ளலுார், சீரநாயக்கன்பாளையம் மையங்களில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. தெரு நாய்களால் பொது மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவரும் அதே நேரம், சில இடங்களில் அவை மனிதர்களால் கொடூரமாக தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் நடக்கிறது. சிங்காநல்லுார் கிருஷ்ணா கார்டனில் காலில் பெரிய காயத்துடன், ரண வேதனையுடன் தெருநாய் ஒன்று சுற்றுகிறது. விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகையில்,'நாய்களால் நமக்கு அச்சுறுத்தல் என்பதில் மறுப்பதற்கில்லை. பொது மக்களும் தெரு நாய்களை தாக்குவதை தவிர்த்து மனித நேயத்துடன் நடந்துகொள்ளலாம். மாநகராட்சிக்கு தகவல் அளிக்கலாம். காயத்துடன் சுற்றித்திரியும் நாய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்' என்றனர்.
'ரேபிஸ் ஹாட்லைன்'
அழைக்க அறிவிப்பு
ரேபிஸ் குறித்த பாதிப்புகள், நாய் கடித்தால் முதலுதவி சிகிச்சை, நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு சந்தேகம் உள்ளிட்ட சந்தேகங்களுக்கு, 24 மணி நேரமும் செயல்படும் 'ரேபிஸ் ஹாட்லைன்' மையத்தை, 98437 89491 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.