உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் மருந்துக்காக காத்திருந்து காலெல்லாம் நோகுதடி!

அரசு மருத்துவமனையில் மருந்துக்காக காத்திருந்து காலெல்லாம் நோகுதடி!

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், மருந்தாளுனர் பற்றாக்குறையால், நீண்ட வரிசையில் அதிக நேரம் நோயாளிகள் காத்திருக்கின்றனர். இதற்கு தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, கடந்த 2009ம் ஆண்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தினமும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாக்களில் உள்ள மக்களின் மருத்துவ ஆதாராமாக இந்த தலைமை மருத்துவமனை உள்ளது.விபத்து மற்றும் உயர் சிகிச்சைக்காக பல கிளை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் இங்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், மருத்துவமனையில், உள்நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், சிகிச்சைக்காக காத்திருப்பதை விட, மருந்துகள் வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதால் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

காத்திருப்பு

பொள்ளாச்சி தலைமை மருத்துவமனையாக தரம் உயர்ந்தாலும், டாக்டர்கள், மருந்தாளுனர்கள் பற்றாக்குறையாக உள்ளது. ஆறு மருந்தாளுனர்கள் இருக்க வேண்டிய இடத்தில், இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.இவர்களும், காலை, 8:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை ஒருவரும், மாலை, 3:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை ஒருவர் என, 'ஷிப்ட்' அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இதனால், நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

ெஷட் அமைக்கணும்!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருந்து வழங்கும் பிரிவில், 'ெஷட்' அமைக்கப்படவில்லை. இதனால், நோயாளிகள், மருந்துகளை வாங்க வெயிலிலும், மழையிலும் நனைந்தபடியே காத்திருக்கின்றனர்.ஏற்கனவே, நோயால் பாதிக்கப்பட்டோர், மேலும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி, 'ெஷட்' அமைக்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.

நோயாளிகள் அதிருப்தி

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மருத்துவமனையில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புள்ளோர், மருந்து பிரிவுக்கு மாதந்தோறும் வந்து செல்கின்றனர்.காய்ச்சல் உள்ளிட்ட வேறு பாதிப்புகளால் பாதிக்கப்பட்டோரும் மருந்து வாங்க தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.ஆனால், மருந்து வழங்கும் பிரிவில், மருந்தாளுனர் பற்றாக்குறையால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.ஒருவருக்கு, மாத்திரை சீட்டு வாங்கி, மருந்துகளை எடுத்துத்தர, 10 நிமிடமாவதால், நோயாளிகள் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.மேலும், பிரேத பரிசோதனையின் போது மருத்துவ குழுவுடன், உடற்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்கவும் மருந்தாளுர் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது, மருந்து வினியோகத்தில் மேலும் தாமதமாகிறது.

மயங்கி விழுறாங்க!

காய்ச்சல் உள்ளிட்ட நோய்க்கு சிகிச்சை பெற்று வருவோர், நீண்ட நேரம் நிற்கும் போது மயக்கம் வந்து கீழே விழும் நிலை உள்ளது.சிலர் வெறுத்துப்போய், மருந்து வாங்காமலே செல்கின்றனர். முதியவர்கள் கால் கடுக்க நிற்க முடியாமல் தரையில் அமர்ந்து காத்திருக்கின்றனர்.அரசு உரிய கவனம் செலுத்தி, மருந்துகள் தாமதமின்றி வழங்க உரிய மருந்தாளுனர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி