சின்ன சின்ன வசதி செய்து தந்தால் பதக்கங்கள் பெற்று காட்டுகிறோம: மாவட்ட நிர்வாகத்திடம் விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு
கோவை::நேரு ஸ்டேடியம் அருகே 'செமி இண்டோர்', 'வால் பிராக்டிஸ்' உள்ளிட்ட தேவைகள், மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.சென்னைக்கு அடுத்து தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் வளர்ச்சி நிலைகளை கொண்ட நகரமாக கோவை விளங்குகிறது. இங்கேயே பிறந்தவர்கள், இருக்கும் வசதிகளை வைத்து தடகளம், கபடி, கோ-கோ உள்ளிட்ட போட்டிகளில், சிறந்த வீரர்களாக உருவெடுத்து வருகின்றனர்.அதே சமயம், ஜிம்னாஸ்டிக், ஷட்டில், துப்பாக்கி சுடுதல், பாக்சிங் போன்ற போட்டிகளுக்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, வீரர்களை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்வதில், முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.இந்நிலையில், கோவை கலெக்டர் நேரு ஸ்டேடியத்தில் இம்மாதம், 10ம் தேதி திடீர் ஆய்வு செய்தார். சரியான நேரத்துக்கு பயிற்சியாளர்கள் வருகின்றனரா என கேட்டறிந்தார்.ஸ்டேடியத்தில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு வாரம் இருமுறை, கீரை, முட்டை வகைகளை தவறாமல் வழங்க அறிவுறுத்தினார். பின்னர், ஜிம்னாஸ்டிக், தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து பயிற்சி மேற்கொண்ட மாணவர்களிடம், கட்டமைப்பு தேவைகளை கேட்டறிந்த கலெக்டர், அவற்றை மாவட்ட விளையாட்டு அதிகாரிகளிடம், கடிதமாக வழங்கவும் அறிவுறுத்தினார். விளையாட்டு வீரர்கள் மீதான, கலெக்டரின் கரிசனம், வீரர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்னாஸ்டிக் மேட் இருந்தால் பதக்கம்
மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஷ்வரி, மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்துள்ள கடிதத்தில், 'ஜிம்னாஸ்டிக் பயிற்சி மேற்கொள்ளும் மாணவ, மாணவியர், 50 'ஜிம்னாஸ்டிக் மேட்' இருந்தால், மேலும் அதிக அளவில் பதக்கங்களை பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.ஸ்டேடியம் எதிரே உள்ள கையுந்து பந்து மைதானத்தை, 'செமி இண்டோர்' ஆக மாற்றிடவும், மாணவர்கள் 'வால் பிராக்டிஸ்' செய்திட பயிற்சி சுவர் அமைத்துத்தரவும், மைதானத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துத்தரவும், கோரிக்கை எழுந்துள்ளது. நேரு ஸ்டேடியத்தின் கழிவுகள் மற்றும் விளையாட்டு விடுதியின் கழிவுகள் சேகரிக்க, குப்பை தொட்டிகளும் தேவைப்படுகின்றன. ஸ்டேடியத்தை சுற்றிலும் பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால், மாநகராட்சி வாயிலாக சுழற்சி முறையில், சுத்தம் செய்து தர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.