தேசிய யோகாசன போட்டிகள் துவக்கம்; பள்ளி மாணவர்கள் அசத்தல்
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் நேற்று துவங்கியது. அதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.இந்திய பள்ளியின் விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் மற்றும் திஷா பள்ளி சார்பில், நடப்பாண்டுக்கான, 68வது தேசிய யோகாசன போட்டிகள், பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி திஷா பள்ளியில் நேற்று துவங்கியது.இதில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகள் மட்டும் நடைபெறுகின்றன; 25 மாநிலங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று துவங்கிய போட்டிகள் மூன்று நாட்கள் நடக்கின்றன.முதல் நாளான நேற்று துவக்க விழா நடந்தது. ஏ.எஸ்.ஐ.எஸ்.சி., (இந்திய பள்ளியின் விளையாட்டு கூட்டமைப்பு) அமைப்பின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ., (பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில்) அமைப்பின் விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரான சார்லஸ், துணை நிதிச் செயலாளர் அர்ச்சித் பாசு, விளையாட்டுத்துறையின் மேலாளர் அர்னவ்குமார் ஷா மற்றும் எஸ்.ஜி.எப்.ஐ., அமைப்பின் இணைச் செயலாளர் சதீஷ் சிங், கள அலுவலர் அஜய் சாண்டல், இணை செயலாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி முதல்வர் உமா, பொது மேலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று முழு திறமையை வெளிப்படுத்தி அசத்துகின்றனர்.தமிழ்நாடு யூத் யோகாசன ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் இணை செயலாளர் ஜெயந்தி கூறுகையில், ''தமிழகத்தில் முதல் முறையாக யோகாசன போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், ஜம்மு காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரையுள்ள 14வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், வெற்றி பெறும் மாணவர்கள், கேலோ இந்திய போட்டிக்கு செல்ல முடியும்.மேலும், ஒலிம்பிக் போட்டியில், யூத் கேம்ஸ் பிரிவில், யோகா சேர்த்துள்ளதுடன், 2036ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் போது, 'டெமோ கேமாக' நடத்த முடிவு செய்துள்ளது. இது பெருமை தரும் விஷயமாகும். யோகா செய்வதால் நிறைய பலன்கள் கிடைக்கும்,'' என்றார்.