மேலும் செய்திகள்
மெல்ல உயர துவங்கியது சோலையாறு நீர்மட்டம்
24-May-2025
- நிருபர் குழு -பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை பகுதிகளில் இடைவிாமல் பெய்யும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. நீர்வரத்து அதிகரிப்பால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், தென்மேற்கு பருவமழை துவங்கி, மூன்று நாட்களாக இடைவிடாது பெய்கிறது.ரோட்டில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது. அத்தியாவசிய தேவைக்கு செல்வோர், நேற்று, பகல் முழுவதும் மழையின் தாக்கம் இருந்ததால், குடை பிடித்தும், ரெயின்கோட் அணிந்தும் சென்றனர்.அவ்வப்போது பலத்த காற்றும் வீசுவதால், பெய்யும் கனமழையால், மரங்கள் வேரோடு சாய்ந்தும், மரக்கிளைகள் முறிந்து விழுந்தும் போக்குவரத்து பாதித்தது. கிராம பகுதிகளில் மின்வினியோகம் பல மணி நேரம் தடைபட்டது.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி வழித்தடங்களில், பஸ் ஸ்டாப் உள்ள இடங்களில் பெரும்பாலும் நிழற்கூரை கிடையாது. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள், மழையில் இருந்து தப்பிக்க, அருகில் உள்ள கடைகளில் தஞ்சம் அடைகின்றனர். கவியருவியில் வெள்ளம்
மேற்குதொடர்ச்சி மலையில், கனமழை பெய்வதால், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியாறு கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி வேலி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில், 'கவியருவிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரோடு ஒட்டிய பகுதிகளில் சுற்றுலா பயணியர் நிற்காமல் இருக்க கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,' என்றனர். கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற ரோடுகளின் முக்கிய பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனம் ஓட்டுநர்கள் சிரமத்துடன் பயணிக்கின்னறர். கிணத்துக்கடவு அடுத்துள்ள 'யுடேர்ன்' பகுதியில் மழைநீர் தேங்கிருப்பதால் வாகன ஓட்டுநர்கள் திரும்பிச் செல்ல சிரமப்படுகின்றனர்.மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் ரோட்டில், அரசு மேல்நிலைப்பள்ளி முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இவ்வழியாக வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், கால்வாயில் மழைநீர் வடிந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்பாறை
வால்பாறையில் கடந்த மூன்று நாட்களாக, தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.எஸ்டேட் பகுதியில் கனமழை பெய்யும் நிலையில், மின்கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் அந்தப்பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கபட்டது. சோலையாறு, நடுமலை, கருமலை, புதுத்தோட்டம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை நேரத்தில் மரம் ரோட்டில் விழுந்ததால், பொள்ளாச்சி ரோட்டில் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மேல்நீராறு, கீழ்நீராறு, அக்காமலை, இறைச்சல்பாறை, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரிகரித்துள்ளது. வால்பாறை நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை தடுப்பணை நிரம்பியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நீர்மட்டம் உயர்வு
சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில், நேற்று முன்தினம் காலை, 12.11 அடி நீர்மட்டம் இருந்தது. இரவில் இடைவிடாமல் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 25.55 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம், 13 அடி உயர்ந்துள்ளது. இதேபோன்று, பரம்பிக்குளம், ஆழியாறு, அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர துவங்கியுள்ளது. அருவி, கோவிலுக்குசெல்ல தடை
உடுமலை, திருமூர்த்திமலைப்பகுதிகளில், கனமழை பெய்வதால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக நேற்றும் அருவிக்கு சுற்றுலா பயணியர், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.மலையடிவாரத்தில், அமணலிங்கேஸ்வரர் கோவிலை, காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால், பாதுகாப்பு கருதி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் வளாகம் முழுவதும் தடுப்புகள் அமைத்து, கோவில் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், சுற்றுலா பயணியர், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ரோட்டில் மழைநீர்
உடுமலையில் பிரதான ரோடுகளில், மழை நீர் வடிகால்கள் இருந்தும், அவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மழை நீர் வெளியேற வழியின்றி ரோட்டில் ஓடியது. உழவர் சந்தை ரோட்டில் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.மேலும், பெரும்பாலான ரோடுகள் பராமரிப்பின்றி, குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், தற்போது மழை நீரும் தேங்கி வருவதால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.ரோட்டில் மழை நீர் தேங்காமல் இருக்க, வடிகால்களை துார்வாரவும், ரோடுகளை புதுப்பிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையளவு
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:சோலையாறு - 99, பரம்பிக்குளம் - 120, ஆழியாறு - 60, வால்பாறை - 114, மேல்நீராறு (சின்னக்கல்லார்)- 213, கீழ்நீராறு - 124, காடம்பாறை - 39, மேல்ஆழியாறு - 40, சர்க்கார்பதி - 40, வேட்டைக்காரன்புதுார் - 43, மணக்கடவு - 40, துாணக்கடவு - 96, பெருவாரிப்பள்ளம் - 95, நவமலை - 36, பொள்ளாச்சி - 80.உடுமலை - 19, அமராவதி - 23, திருமூர்த்தி அணை - 45, திருமூர்த்தி ஆய்வு மாளிகை - 44, மடத்துக்குளம் - 12, வரதராஜபுரம் - 44, பெதப்பம்பட்டி - 38, பூலாங்கிணர் - 32, நல்லாறு - 44, உப்பாறு அணை - 18 மி.மீ., என்ற அளவில் மழை பெய்தது.
24-May-2025