ஏழுருமை ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டுப்பாளையம்; கோடை மழை காரணமாக காரமடை அருகே உள்ள ஏழுருமை பள்ளம் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.கடந்த இரண்டு நாட்களாக மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை நன்கு பெய்தது. இதனால் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏழுருமை பள்ளத்திற்கு செல்லும் நீர் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இங்கே தேங்கி நிற்கும் மழை நீரால் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், உள்ள விவசாய கிணறுகளுக்கு ஆண்டு முழுவதும் நீரூற்று கிடைக்கும். மேலும், இந்த தண்ணீர் பவானி ஆற்றுக்கும் செல்கிறது.இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், கடும் வெயிலால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்த நிலையில், கோடை மழையால், தற்போது நீர்வரத்து அதிகமாகியுள்ளது. இதனால் கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. காய்கறிகள் உற்பத்தியை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளோம், என்றனர்.