மனித-வனவிலங்கு மோதல் அதிகரிப்பு : தீர்வு காண வலியுறுத்தல்
வால்பாறை: நீலகிரி, வால்பாறையில் நிலவும் மனித - வனவிலங்கு மோதலை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிற்சங்கங்கள் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் நீலகரி தேயிலை தோட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வால்பாறை அமீது (அ.தி.மு.க.,), வினோத்குமார், சவுந்திரபாண்டியன் (எல்.பி.எப்.,), கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,), நீலகிரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட, 11 தொழிற்சங்க தலைவர்கள் இணைந்து கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில், சமீப காலமாக மனித - வனவிலங்கு மோதல் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன், ஒற்றை யானை தாக்கியதில் பாட்டி, பேத்தி இறந்தனர். வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமலும், இரவில் நிம்மதியாக துாங்க முடியாமலும் தவிக்கின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டங்களில் வனவிலங்கு தாக்கி நடப்பாண்டில், இது வரை, 20 பேர் உயிரிழந்துள்ளனர். மனித - வனவிலங்கு மோதலை தடுக்க தொழிலாளர் குடியிருப்பை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட்களில் வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.