அமெரிக்க ஜவுளி சந்தையில் வளரும் இந்தியா; எட்டு சதவீத சந்தையைக் கைப்பற்றி அசத்தல்; டிரம்ப் கெடுபிடியால் சின்னாபின்னமாகும் சீனா
கோவை :அமெரிக்க ஜவுளி சந்தையில் சீனாவின் பங்கு தொடர்ந்து சரியும் நிலையில், இந்தியா முதல் முறையாக, 8 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரிவிதிப்புக் கொள்கை, சீனாவை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க ஜவுளி இறக்குமதியில் சீனாவின் பங்கு மாதம்தோறும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஏப்.,ல் 79.6 கோடி டாலர்களாக இருந்தது, மே மாதம் 55.6 கோடி டாலர்களாக குறைந்துள்ளது. இது, 2003ம் ஆண்டுக்குப் பின் மிகக் குறைந்த அளவாகும். வழக்கமாக, 18 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் சீனாவின் பங்களிப்பு, கடந்த மே மாதம் 9.6 சதவீதமாக குறைந்துள்ளது. சீனாவின் சரிவு, மற்ற நாடுகளுக்குச் சாதகமாகியுள்ளது. இதையடுத்து, வியட்நாம் 22 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தையும், வங்கதேசம் 10 சதவீத பங்களிப்புடன் 2வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியா, இதுவரை இல்லாத வகையில், 8 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது. கடந்த ஜன., முதல் மே வரையிலான காலகட்டத்தில், அமெரிக்க ஜவுளி சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு, 7.7 சதவீதமாக உள்ளது. கிட்டத்தட்ட மாதம் சராசரியாக ரூ.1,100 கோடி அளவுக்கு கூடுதலாக வர்த்தகமாகியுள்ளது. இந்த நிலை தொடர அதிக வாய்ப்பு இருப்பதால், மிக ஆரோக்கியமான சூழல் நிலவுவதாக, இந்திய ஜவுளித்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஐ.டி.எப்., எனப்படும் இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன், ''ஏற்கனவே உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் தங்கள் உற்பத்திக் கட்டமைப்பை விரிவாக்கம் செய்கின்றன. அதோடு, நூற்பாலைத் துறையினரும் ஆயத்த ஆடை உற்பத்திக் கட்டமைப்பை நிறுவ முயற்சி எடுத்துவருவது, ஏற்றுமதி வளர்வதற்கு உதவும் எனக் கருதுகிறோம்,'' என்றார்.