மாநகராட்சி பகுதிகளில் தலைமை செயலர் ஆய்வு
கோவை; கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் பணிகளை, தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் ஆய்வு செய்தார்.வடவள்ளி பி.என்.ஆர்., நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டிய சாலைகளை கான்கிரீட் கலவை வாயிலாக சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டார். கே.என்.ஜி.புதுார், ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் மண் சாலையை தார் சாலையாக அமைப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.வார்டு எண்: 17க்கு உட்பட்ட சேரன் நகர் பகுதியில் நவீன தொழில் நுட்பத்துடன், 400 வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதை நேரில் பார்வையிட்ட தலைமை செயலர், பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அதன்பின், காந்திபுரம் நேரு வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையினை பார்வையிட்டார். அப்போது, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர் சிவக்குமார், மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை, மாநகர தலைமை பொறியாளர் (பொ) முருகேசன், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.