பெற்றோரை இழந்த மாணவர்கள் 25 பேரிடம் காப்பீடு விண்ணப்பம்
- நமது நிருபர் -கோவை மாவட்டத்தில்,விபத்தில் பெற்றோரை இழந்த 25 மாணவர்களிடமிருந்து, அரசு சார்பில் வழங்கப்படும் காப்பீடு தொகைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர் விபத்தில் மரணமடைந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, அந்த மாணவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல் கல்வியைத் தொடர உதவியாக, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்வாயிலாக,தலா ரூ.75,000 விபத்துக் காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை, மாணவரின் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்படும். இதில் இருந்து கிடைக்கும், 6.87 சதவீத வட்டியை, மாணவர்கள் ஆண்டுதோறும் பெற்றுக்கொள்ளலாம்.5 ஆண்டுகளில் காப்பீடு முதிர்வடையும். அசல் தொகையை,21 வயதுக்கு பின் மாணவர்கள்எடுத்து பயன்படுத்தலாம். கோவை மாவட்டத்தில், விபத்தில் பெற்றோரை இழந்த 25 மாணவர்கள் இத்திட்டத்தில் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் நடப்பு கல்வியாண்டில் விண்ணப்பித்த,15 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 12ம் வகுப்பு பயிலும் 6 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் இதுவரை, 258 மாணவர்களிடம் இந்த விபத்துக் காப்பீட்டுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.