தொழிலாளிக்கு சிகிச்சை கட்டணம்; இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
கோவை; கோவை, துடியலுார் அருகேயுள்ள என்.ஜி. ஜி.ஓ., காலனியை சேர்ந்த கார்த்திகேயன்,54, என்பவர், அதே பகுதியிலுள்ள அக்குவாசப் இன்ஜினீயரிங் மோட்டார் பம்ப் கம்பெனியில், தொழிலாளியாக வேலை செய்தார்.கம்பெனி சார்பில், ஸ்டார் ெஹல்த் இன்சூரன்சில், மருத்துவ காப்பீடு செய்யப்பட்டது. 2021ல் கொரோனா பாதிப்பால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மருத்துவ செலவுக்கான தொகையை வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால், மருத்துவ செலவு தொகை வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்தது. இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கார்த்திகேயன் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் சிகிச்சை பெற்ற தொகை, 15,000 ரூபாய், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய், இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.