பள்ளிகளுக்கு இடையே ஹாக்கி : கலக்கிய மாணவ, மாணவியர்
கோவை: கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி, பல்வேறு இடங்களில் நடந்தது. மாவட்ட ஹாக்கி சங்கம் நடத்திய இப்போட்டியின் இறுதிப்போட்டி, இந்துஸ்தான் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியும், ராகவேந்திரா வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணியும் மோதின. சச்சிதானந்த பள்ளி அணி, 8-7 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மாணவியருக்கான போட்டியில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அணி, 5-1 என்ற கோல் கணக்கில், சி.எஸ்.ஐ., பெண்கள் பள்ளி அணியை வென்றது. 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அணி, 4-1 என்ற கோல் கணக்கில் கீர்த்திமான் அகாடமி பள்ளி அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் இணை செயலாளர் பிரியா பரிசுகள் வழங்கினார். முதல்வர் நடராஜன், உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார், போட்டியின் குழு தலைவர் சோமசுந்தரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.