சத்துணவு உதவியாளர் பணிக்கு நேர்காணல்; ரூ.3,000 சம்பளம் என்பதால் ஆர்வம் குறைவு
அன்னுார்; சத்துணவு உதவியாளர் பணிக்கு குறைந்த விண்ணப்பதாரர்களே நேர்காணலுக்கு வந்திருந்தனர்.அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 75 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை ஆறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 95 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் காலியாக உள்ள 15 சத்துணவு உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேற்று அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது.மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பாலமுருகன், தாசில்தார் யமுனா, வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கரி ஆகியோர் நேர்காணல் செய்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபுராஜ், பீர் முகமது ஆகியோர் சான்றிதழ்களை சரி பார்த்தனர். ஆம்போதி நடுநிலைப் பள்ளி சத்துணவு மையம் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை.மீதமுள்ள 14 பணியிடங்களுக்கு தகுதியுள்ள 42 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.விண்ணப்பதாரர்கள் கூறுகையில்,' முதல் ஆண்டு மாத சம்பளம் வெறும் 3000 ரூபாய் மட்டுமே. இரண்டாம் ஆண்டு 5000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தனர். மிகக் குறைந்த சம்பளம் என்பதால் ஒரு பணியிடத்திற்கு மூன்று பேர் தான் விண்ணப்பித்துள்ளனர்,' என்றனர்.