ஒரு வாழை மரத்துக்கு இழப்பீடு ஆறு ரூபாய்தானா? போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு
கோவை; மழை, காற்றால் சேதமடைந்த, இரண்டு லட்சம் வாழைமரங்களுக்கு குறைவான தொகை இழப்பீடு வழங்கும், வேளாண் மற்றும் வருவாய்த்துறையினரை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.கோவை வடக்கு வருவாய் கோட்டத்துக்குட்பட்ட வடக்கு, மேட்டுப்பாளையம், அன்னுார் தாலுகாக்களிலும், தெற்கு தாலுகாவுக்குட்பட்ட பேரூர், மதுக்கரை, சூலுார் தாலுகாக்களில் சுமார் 2 லட்சம் வாழை மரங்கள் விளைவிக்கப்பட்டிருந்தன.தென்மேற்குப்பருவமழை, சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் அத்தனையும் சாய்ந்தன. விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு இழப்பீடு கேட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் வலியுறுத்தினர். வேளாண், தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறையினர் விளைநிலங்களுக்கு சென்று இழப்பீடு குறித்து கணக்கெடுத்தனர். கணக்குப்படி குறைந்த தொகையே நஷ்டஈடாக வழங்க முடிவானதால், அதிர்ச்சி அடைந்துள்ளனர் விவசாயிகள். இது குறித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகி வெள்ளக்கிணறு காளிச்சாமி கூறியதாவது: மளிகைக் கடையில் ஒரு வாழைப்பழம் 10 ரூபாய்க்கு விற்கிறது. ஆனால் அதிகாரிகள் ஒரு வாழை மரத்துக்கே, 6 ரூபாய் 80 பைசா இழப்பீடு கொடுப்பதாக சொல்கின்றனர். நன்கு படித்த அதிகாரிகளுக்கு, கணக்கு தெரியவில்லையா அல்லது விவசாயிகளை ஏமாற்ற நினைக்கின்றனரா. நியாயமான இழப்பீட்டை சரியான முறையில் கணக்கிட்டு, வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டத்தில் இறங்குவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
தப்புக்கணக்கு போடாதீங்க!
'கணக்குப்படி ஒரு ஏக்கருக்கு, 17,000 ரூபாய் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டது. அந்த கணக்குப்படி பார்த்தால் வாழை ஒன்றுக்கு, 6 ரூபாய் 80 காசு ஆகிறது. ஒரு வாழைக்கன்று வாங்க, 15 முதல் 20 ரூபாய். அதை நட 8 ரூபாய் கூலி, மொத்தமாக ஒரு வாழைக்கன்று நட, 28 ரூபாய். அப்படி இருக்கும் போது, ஒரு வாழை மரத்துக்கு, 6 ரூபாய் 80 பைசா என்பதை எப்படி ஏற்க முடியும்' என்கின்றனர் விவசாயிகள்.