உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடுதோறும் குடிநீர் சப்ளையாகுதா? கிராம சபையில் விவாதிக்க அறிவுரை

வீடுதோறும் குடிநீர் சப்ளையாகுதா? கிராம சபையில் விவாதிக்க அறிவுரை

கோவை; வீடுதோறும் குடிநீர் வழங்கிய ஊராட்சி என்ற நிலையை ஏற்படுத்த செய்ய வேண்டிய பணிகள் குறித்து, கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.உள்ளாட்சி தினமான நவ., 1ல் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்துவது வழக்கம். நடப்பாண்டு நிர்வாக காரணங்களால் நடத்தாததால், 23ல் (நாளை) நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தி, அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சிறப்பாக பணிபுரிந்த துாய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை கவுரவிக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழை எதிர்கொள்ள எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.மேலும், திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சி என அறிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர் வரவு - செலவு குறித்து விவாதிக்க வேண்டும். 2025-26ல் செய்ய வேண்டி பணிகளை தேர்வு செய்து, ஒப்புதல் பெற வேண்டும்.பயிற்சி பெற்ற மகளிர் குழுவினர் மூலம், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தரத்தை ஆய்வு செய்து பதிவேட்டில் பதிவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். வீடுதோறும் குடிநீர் வழங்கிய ஊராட்சி என்ற நிலைக்கு மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.பள்ளிகள், அங்கன்வாடிகள், அரசு பொது கட்டடங்களுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் சப்ளை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதும் குடும்ப தலைவரின் ஆதார் எண் பெற்று, ஜல் ஜீவன் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை