உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்தடை புகார்களை தீர்க்க புதிய திட்டம்! முதல்வர் உத்தரவால் துவக்கம்

மின்தடை புகார்களை தீர்க்க புதிய திட்டம்! முதல்வர் உத்தரவால் துவக்கம்

கோவை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில், முதல்வர் விஜய் ஆய்வு செய்த பின், ஆரோக்கியமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. அதில் முக்கியமானது மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் திட்டம். மின்வெட்டு, டிரான்ஸ்பார்மர் பழுது, மின்கம்பி துண்டாவது, லோடு சிக்கல், புதைவட கேபிள் பழுதாவது உள்ளிட்டவற்றால், அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. எதிர்க்கட்சியினர் இது குறித்து அரசை விமர்சித்து வருகின்றனர். மின்வாரியத்தில் என்னதான் நடக்கிறது, பார்ப்போமே என்ற முடிவுடன் கடந்த வாரம் முதல்வர் விஜய், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு திடீர் விசிட் அடித்தார். மின் தேவை, விநியோகம், எதனால் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது குறித்தெல்லாம் அதிகாரிகளிடம் உட்கார்ந்து விலாவாரியாக விசாரித்தார். அதன் அடிப்படையில் உள்கட்டமைப்பு மேம்பாடு, டிரான்ஸ்பார்மர்களை மாற்றுவது உள்ளிட்ட தேவைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற உத்தரவிட்டார். பழுதுகளை உடனடியாக சரிசெய்ய தேவையான களப்பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் சொன்னார்கள். தற்காலிகமாக 18,000 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க உடனடியாக உத்தரவிட்ட முதல்வர், பொதுமக்களின் புகார்களை உடனடியாக தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் எதிரொலியாக, மின்துறை சார்ந்த புகார்களை அந்தந்த மின்வாரிய பிரிவு அலுவலராக உள்ள உதவிபொறியாளரின் மொபைல் போன் எண்ணில் தெரிவிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பகுதிவாரியாக மின்வாரிய பிரிவு அலுவலர் போன் எண், ஒவ்வொரு மின்நுகர்வோருக்கும் மெசேஜ் ஆக அனுப்பப்படுகிறது. கோவை (மெட்ரோ) மாநகரில் 6.5 லட்சம் மின் இணைப்புகளும், வடக்கில் 5.5 லட்சம், தெற்கில் 6.5.லட்சம் மின் இணைப்புகளும் உள்ளன. அத்தனை இணைப்புகளுக்கும் இந்த மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மெட்ரோ மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சாந்தநாயகியிடம் நமது நிருபர் கேட்டார். அதற்கு அவர், ''மின்வினியோகத்தில் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. மெட்ரோவில், 53 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. அதிலுள்ள உதவி பொறியாளரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் புகார்களை, அவர் களப்பணியாளர்களுக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். இதற்காக களப்பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். சிக்கலுக்கு தீர்வு கண்ட பிறகு அது குறித்தும் பதிவு செய்யப்படுகிறது. தீர்க்க முடியாத பெரிய பிரச்னைகள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படும். தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து அவற்றையும் தீர்த்து வைப்பார்கள்,'' என்றார். இதற்கு முன் மின் புகார்களை கூற பொதுமக்கள் போன் செய்தால், 'நீங்கள் வரிசையில் உள்ளீர்கள்; காத்திருக்கவும்' என்று பதிவு செய்யப்பட்ட தகவல் வரும். காத்திருந்தால் சிறிது நேரத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும். திராவிட ஆட்சிகளில் பின்பற்றப்பட்ட இந்த நடைமுறையால் வெறுத்துப்போயுள்ள மின்நுகர்வோருக்கு, இந்த புதிய திட்டம் ஆறுதல் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை, உடனுக்குடன் புகார்களுக்கு தீர்வு காணும் வரை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

T.S.SUDARSAN
செப் 29, 2026 15:49

சார், நான் மின்வாரியத்தில் ஒரு ஓய்வு பெற்ற மேற்பார்வை பொறியாளர். 15 வருடம் ஆகிவிட்டது. என்னால் இன்று நடக்கும் மின் தேவை பற்றி ஒரு போர்க்கால அடிப்படை புரிதலுடன் ஒரு முடிவை தங்களிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். அதற்கு தங்களை நேரில் சந்தித்து மிக சுருக்கமாகவும் மேலும் படஜெட் எகிறமாலும் மக்களின் உடனடி தேவைகளை நிறைவேறிட முடியும். மிக்க நன்றி


munna
செப் 29, 2026 11:31

என் வீட்டிற்கு ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 5ஆம் தேதி ரீடிங் எடுக்கப்பட வேண்டும் ஆனால் கடந்த 2026 மே மாதம் 23ஆம் தேதி அதாவது 78 நாட்கள் கழித்து ரீடிங் எடுத்ததால் மின் கட்டணம் ஸ்லாப் மாறி அதிகமாக பில் தொகை வந்துள்ளது. 3200 ரூ வர வேண்டிய இடத்தில் 8500 ரூபாய் வந்துள்ளது. ஆனால் பில்லில் 5ஆம் தேதி ரீடிங் எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 18 நாட்கள் கழித்து எடுத்ததால் சராசரியாக எனக்கு வர வேண்டிய 600 யூனிட் வெயில் காலத்தில் மட்டும் 1144 யூனிட்களாக வந்துள்ளது இதே போல் ஜூலை 2026 மாதம் 5 ஆம் தேதி எடுக்க வேண்டிய மீட்டர் ரீடிங் ஜூலை 18 ஆம் தேதி எடுத்தனர். ஆனால் பில்லில் 9ஆம் தேதி எடுத்ததாக காண்பித்துள்ளனர். இந்த முறையும் 15 நாட்கள் தாமதமாக எடுத்ததால் 900 யூனிட் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறி மின் கட்டணம் ரூ 6416 வந்துள்ளது. இதே போல் செப்டம்பர் 2026 மாதம் 5 ஆம் தேதி எடுக்க வேண்டிய மீட்டர் ரீடிங் ஜூலை 20 ஆம் தேதி எடுத்தனர். ஆனால் பில்லில் 12ஆம் தேதி எடுத்ததாக காண்பித்துள்ளனர். இந்த முறையும் 7 நாட்கள் தாமதமாக எடுத்ததால் 900 யூனிட் அதிகரித்து மின் கட்டணம் ரூ 6146 வந்துள்ளது. எனது கடந்த கால மின் பயன்பாட்டு 500 முதல் 600 யூனிட் மட்டுமே இருந்த்துள்ளது. மின் வாரியம் மக்களை ஏமாற்றும் விதமாக உள்ளது. இன்னும் ஒரு விஷயம் என்னை அதிர்ச்சிக்குள்ளானது. செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்டது. 24 ஆம் தேதி பார்த்தால் 265 யூனிட் பயன்படுத்தியதாக காண்பித்தது. இதன் சார்ந்து புகார் அளிக்க சென்றேன். மீட்டர் பழுதாகி இருக்கும் மாற்றித் தருவதாக கூறினார்கள். ஆனால் நான் கடந்த மூன்று நாட்களாக நான் பயன்படுத்தும் மின் அளவை மின்சார மீட்டரில் குறிப்பெடுத்தேன். மீட்டரில் எந்த கோளாறுகள் இல்லை என அறிந்தேன். அதையும் மின்சார அலுவலகத்தில் உதவிப் பொறியாளரிடம் தெரிவித்தேன். ஒரு விண்ணப்பம் எழுதி தருமாறு கூறினார்கள். கடந்த 2 வருடங்களாக எனக்கு வந்த யூனிட் களை கருத்தில் கொண்டு சராசரியாக எவ்வளவு வருகிறது என சரிபார்த்த பின்னர் நான் அதிகமாக கட்டிய தொகை என் மின் கட்டண முன் பணத்தில் சேர்ப்தாக கூறியுள்ளார். இந்த மின் கட்டண உயர்வு மீட்டரில் பழுதோ அல்லது அதிக பயன்பாடோ கிடையாது. உண்மையில் மின் கட்டண உயர்விற்கு மின் வாரியம் 60 நாட்களுக்கு ஒரு முறை எடுக்க வேண்டிய மீட்டர் ரீடிங் 75 நாட்கள் முதல் 78 நாட்கள் தாமதமாக ரீடிங் எடுத்து அதனை 60 நாட்களுக்குள் எடுத்ததாக காண்பித்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?