பணி நீக்கம் செய்யப்பட்டோருக்கு நீதி: துாய்மை பணியாளர்கள் போராட்டம்
கோவை: பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்களை, மீண்டும் சேர்க்க வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியில், 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு குப்பை சேகரிப்பு பணி, ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பணி நிரந்தரம் கோரி போராடி வந்த தற்காலிக பணியாளர்களுக்கு, இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தினக்கூலி உயர்வு கோரி இப்பணியாளர்கள் அடிக்கடி போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், இ.எஸ்.ஐ., பி.எப்.,தொகை, போனஸ் தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்திடம் கேள்வி எழுப்பிய ஏழு பேர், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக்கூறி, சமூக நீதி அமைப்பு சாரா மற்றும் பொது பணியாளர் சங்கத்தினர், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில தலைவர் பிரபாகரன் கூறுகையில், ''இ.எஸ்.ஐ., பி.எப்., தொகையை முறையாக செலுத்தாதது குறித்து, ஒப்பந்த நிறுவனத்திடம் கேள்வி எழுப்பிய ஏழு ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், கிழக்கு மண்டலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பணியில் சேர்க்குமாறு போராடி வருகிறோம். ஒப்பந்த நிறுவனத்தினர் மறுக்கின்றனர். போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்,'' என்றார்.