கல்லுாரிகளுக்கு இடையே கபடி: லீக் சுற்றில் அசத்தும் அணிகள்
கோவை : பாரதியார் பல்கலை கபடி போட்டியில் 'நாக்-அவுட்' போட்டிகளை தொடர்ந்து, 'லீக்' சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றன.பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, ஆண்களுக்கான கபடி போட்டி பல்கலை உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது. எட்டு கல்லுாரி அணிகள் பங்கேற்ற இப்போட்டிகளை, பல்கலை உடற்கல்வித்துறை இயக்குனர் ராஜேஸ்வரன் துவக்கிவைத்தார்.'நாக்-அவுட்' முறையிலான முதல் போட்டியில், டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி அணியும், எஸ்.ஆர்.எஸ்., கல்லுாரி அணியும் மோதியது. அபாரமான ஆட்டத்தை வெளியப்படுத்திய என்.ஜி.பி., கல்லுாரி அணியினர், 58-17 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றனர். தொடர்ந்து, கே.பி.ஆர்., கல்லுாரி அணியும், பாரதியார் பல்கலை அணியும் மோதின. கடும் போட்டிகளுக்கு இடையே, இரு அணி வீரர்களும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்த, 31-29 என, இரு புள்ளிகள் வித்தியாசத்தில், கே.பி.ஆர்., அணி வென்றது.ரத்தினம் கல்லுாரி அணி, 49-12 என்ற புள்ளி கணக்கில், காமதேனு கல்லுாரி அணியையும், ஈரோடு அரசு கலை அறிவியல் கல்லுாரி அணி, 48-17 என்ற புள்ளி கணக்கில், ராமு கலை அறிவியல் கல்லுாரி அணியையும் வென்றது. வெற்றி பெற்ற நான்கு அணிகளுக்கும், 'லீக்' முறையில் போட்டிகள் நடந்துவருகின்றன.