கல்லுாரிகளுக்கு இடையே கபடி; காங்கேயம் கல்லுாரி முதலிடம்
கோவை; பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட மண்டலங்களுக்கு இடையே கல்லுாரி மாணவர்களுக்கான கபடி போட்டி இரு நாட்கள் நடந்தது. பல்கலை மைதானத்தில் 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் போட்டிகள் நடந்தன. 'நாக் அவுட்' சுற்றுகளை அடுத்து 'லீக்' முதல் போட்டியில், ஸ்ரீ ராமு கல்லுாரி அணியும், பாரதியார் பல்கலை அணியும் மோதின. இதில், 38-24 என்ற புள்ளிகளில் பாரதியார் பல்கலை அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, காங்கேயம் வணிகக் கல்லுாரி அணி, 33-30 என்ற புள்ளிகளில் ஈரோடு அரசு கலைக் கல்லுாரி அணியையும், ஈரோடு அரசுக் கல்லுாரி அணி, 27-26 என்ற புள்ளிகளில் பாரதியார் பல்கலை அணியையும், காங்கேயம் வணிகக் கல்லுாரி அணி, 31-25 என்ற புள்ளிகளில் ஸ்ரீ ராமு கலை அறிவியல் கல்லுாரி அணியையும் வென்றன. ஈரோடு அரசுக் கல்லுாரி அணி, 57-24 என்ற புள்ளிகளில் ஸ்ரீ ராமு கல்லுாரி அணியையும், காங்கேயம் அரசுக் கல்லுாரி அணி, 35-22 என்ற புள்ளிகளில் பாரதியார் பல்கலை அணியையும் வென்றன. நிறைவில், காங்கேயம் கல்லுாரி முதலிடம், ஈரோடு அரசுக் கல்லுாரி இரண்டாமிடம் வென்றன. பாரதியார் பல்கலை அணி மூன்றாமிடம், ஸ்ரீ ராமு கலை அறிவியல் கல்லுாரி நான்காமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, பல்கலை உடற்கல்வி துறை இயக்குனர் அண்ணாதுரை, உடற்கல்வி துறை பேராசிரியர் குமரேசன் உள்ளிட்டோர் பரிசு வழங்கினர்.