வாகனங்களை வழிமறிக்கும் கபாலி; அதிரப்பள்ளி ரோட்டில் பரபரப்பு
வால்பாறை; வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் முகாமிட்டுள்ள 'கபாலி' என்ற ஒற்றை யானை வாகனங்களை வழிமறிப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், இருமாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் இங்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பகல் நேரத்தில் உணவு மற்றும் தண்ணீரை தேடி யானைகள் ரோட்டை கடப்பதால், சுற்றுலா வாகனங்கள் அதிவேகமாக செல்லும் போது விபத்தும் ஏற்படுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்லும் யானைகளிடம் சிக்கி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.சாலக்குடியிலிருந்து வால்பாறை நோக்கி வந்த கேரள அரசு பஸ் மற்றும் லாரியை, 'கபாலி' என்ற ஒற்றையானை அதிரப்பள்ளி ரோட்டில் வழிமறித்தது. இதனால் பீதியடைந்த டிரைவர்கள் வாகனத்தை அங்கேயே நிறுத்தி அமைதி காத்தனர்.சிறிது நேரம் ரோட்டில் அங்கும், இங்கும் நடந்து சென்ற யானை, வாகனங்களுக்கு வழிவிட்டு ஓரமாக நின்றது. அதன்பின், அதிரப்பள்ளி ரோட்டில் வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் ஒற்றை யானை கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது. இந்த யானை யாரையும் துன்புறுத்துவதில்லை. பாசமாக பேசினாலே தானாக வழிவிட்டு ஓரமாக நின்று விடும். இருப்பினும், வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் சுற்றுலா பயணியர் இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.