சிறுமலையில் காரைக்குடி கவுன்சிலர்கள் மேயருக்கு எதிரான தீர்மானம் புஸ்
Deprecated: mb_convert_encoding(): Handling HTML entities via mbstring is deprecated; use htmlspecialchars, htmlentities, or mb_encode_numericentity/mb_decode_numericentity instead in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 350
காரைக்குடி:கவுன்சிலர்கள் சிறுமலைக்கு சுற்றுலா சென்றுவிட்ட நிலையில், காரைக்குடி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி தி.மு.க., மேயர் முத்துதுரைக்கு எதிராக, அதே கட்சியைச் சேர்ந்த துணை மேயர் குணசேகரன் தலைமையில் கவுன்சிலர்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கமிஷனர் சங்கரனிடம் மனு அளித்தனர். இதில், தி.மு.க., -- காங்., -- அ.தி.மு.க., -- கம்யூனிஸ்ட், சுயேச்சை உட்பட, 24 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டனர். ஆனால், தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. 22வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ராம்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், மாநகராட்சி கூட்டத்தை கூட்டி, விதிகளின்படி ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கூட்டம் நேற்று நடந்தது. இதில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஏழு பேர், ஒரு சுயேச்சை கவுன்சிலர் என, எட்டு பேர் மட்டுமே பங்கேற்றனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கேட்ட துணை மேயர் குணசேகரன் உட்பட, 16 கவுன்சிலர்கள் வரவில்லை. போதிய கவுன்சிலர்கள் இன்றி, ஓட்டெடுப்பு தோல்வி அடைந்ததாக கமிஷனர் தெரிவித்தார். மேயர், துணை மேயர் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை தி.மு.க., பொறுப்பு குழு தலைவர் சேசு ராசு, தன் சமூக வலைதள பக்கத்தில், சிறுமலையில் கருணாநிதிக்கு காரைக்குடி கவுன்சிலர்கள் அஞ்சலி செலுத்தியதாக படம் வெளியிட்டுள்ளார். மேயருக்கு எதிராக இருந்த கவுன்சிலர்களை, அமைச்சர் பெரியகருப்பன் பேசி சமரசம் செய்ததாக கூறப்படும் நிலையில், மேயர் தலைமையில் அனைவரும் சிறுமலைக்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது.
வால்பாறையில் கூட்டம் ரத்து
கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி தலைவரான தி.மு.க.,வைச் சேர்ந்த அழகுசுந்தரவள்ளிக்கு எதிராக, கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். நேற்று காலை, 11:00 மணிக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. நகராட்சி அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். கவுன்சிலர்களை போலீசார் தடுத்து, 'மறைமுக தேர்தல் நடைபெறுவதால் உள்ளே மொபைல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை' என்றனர்.இதையடுத்து, கூட்ட அரங்கினுள் கவுன்சிலர்கள் செல்லாத நிலையில், காலை, 11:40 மணி வரை காத்திருந்த கமிஷனர் கணேசன், கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார். ஆவேசமடைந்த கவுன்சிலர்கள் கமிஷனர் மற்றும் நகராட்சி தலைவருக்கு எதிராக கோஷமிட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.