மாசாணியம்மன் கோவிலில் டிச., 12ல் கும்பாபிஷேகம்; மூலவர், பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம்
பொள்ளாச்சி : ஆனைமலையில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்கடந்த, 2010ம் ஆண்டு டிச., 12ம் தேதி நடந்தது. கும்பாபிேஷகம் நிறைவடைந்து, 14 ஆண்டுகளான நிலையில், மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.சட்டசபையில் ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவித்தார்.அதன்படி கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜகோபுரம் பாலாலயம் நடந்தது.இதை தொடர்ந்து, 65 அடி உயரம் உள்ள ராஜகோபுரத்துக்கு, 35 லட்சம் ரூபாய் செலவில் வர்ணம் பூசும் திருப்பணி நடக்கிறது. மற்ற பகுதிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் செலவிலும் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சிலைகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.நேற்று மூலஸ்தானம் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம் நடந்தது. அதில், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில், 20 பேர் பங்கேற்று யாக சாலை பூஜைகள் செய்தனர். கலசங்கள் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விநாயகர் கோவில் அருகே அத்தி மர பலகையில் சுவாமி சக்திஏற்றப்பட்டது.இதில், அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அறங்காவலர் குழு தலைவர் கூறியதாவது:கும்பாபிஷேக திருப்பணிகள் மொத்தம், 2 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. கும்பாபிேஷகம் வரும் டிச., 12ம் தேதி காலை, 9:00 மணி முதல், 9:45 மணிக்குள் நடக்கிறது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.தற்போது, மூலவர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கான பாலாலயம் நடந்தது. இதையடுத்து, சக்தி ஏற்றப்பட்ட அத்தி மரத்திலான சுவாமிகள், விநாயகர் கோவில் அருகே வைக்கப்பட்டுள்ளன. கும்பாபிேஷகம் வரை அங்கு தான் பூஜைகள் நடத்தப்படும். கும்பாபிேஷகம் நடந்ததும், மூலவர் சன்னதி வழக்கம் போல திறக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.