உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணி தாமதம்; பங்குனி தேர்த்திருவிழா இந்தாண்டாவது நடக்குமா?

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணி தாமதம்; பங்குனி தேர்த்திருவிழா இந்தாண்டாவது நடக்குமா?

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவையின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றாகவும், முக்தி தலமாகவும், ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின், ரூ.3.5 கோடி மதிப்பில் கும்பாபிேஷகம் நடத்தப்போவதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது.இதனையடுத்து கடந்தாண்டு செப்.,ல், கும்பாபிஷேக பணிகள் துவங்குவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. அதன்பின், கும்பாபிஷேகப் பணி துவங்கப்பட்டது. 15 மாதங்கள் நிறைவடைந்தும், இன்னும் முடியவில்லை.கும்பாபிஷேக பணிகள் காரணமாக கடந்தாண்டு, இக்கோவிலின் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர தேர்திருவிழா, கோவிலின் உட்புறத்திலேயே நடந்தது. தேர் ஓடவில்லை. பங்குனி மாதத்திற்கு முன்பே, கும்பாபிஷேகம் நடந்தால் மட்டுமே, வழக்கம்போல தேர் திருவிழா நடக்கும். ஆனால், கும்பாபிஷேக பணிகளில் இழுபறி ஏற்பட்டு வருவதால், இந்தாண்டும் பங்குனி உத்திர திருவிழா நடக்குமா என்ற சந்தேகம், பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது.

காலதாமதம் ஏன்?

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலா கூறுகையில், கோவிலின் உள்புறத்தில் பணிகள் முடிவடைந்தன. ராஜகோபுரம் பணிகள் நடக்கின்றன. ராஜகோபுரத்தில் உள்ள சிலைகளில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும், 12 ஆண்டுகளுக்கு நிலைத்து இருக்க வேண்டும் என்பதால், அதனை சரிசெய்து, வர்ணம் பூசப்படுகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இருப்பினும், தை மாதத்தில், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளதால், விரைந்து பணிகள் முடிக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை