இளைஞர்கள் படிக்க வேண்டிய நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர்
கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நுால்கள் குறித்து, நமது வாசகர் கள் தங்கள் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம், தமிழின் மூத்த எழுத்தாளர் நா.பார்த்தசாரதி எழுதிய, 'குறிஞ்சி மலர்' நாவல் குறித்து, கோவை அம்பிகா காட்டன் மில்ஸ் நிறுவனத்தின் தலைவர் இயகோகா சுப்பிரமணியம் விவரிக்கிறார்.நா.பா.,வின் எழுத்து, பள்ளி வயதிலேயே என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அதன் பிறகு அவரது படைப்புகளை தேடி பிடித்து படிக்க துவங்கினேன். நா.பா.,வின் படைப்புகளை முழுமையாக படித்த வாசகர்களில் நானும் ஒருவன்.அவரது நாவல்களில், 'குறிஞ்சி மலர்' மிக சிறப்பான படைப்பு. இந்த நாவலை படித்த வாசகர்கள், அந்த கதையின் நாயகன் அரவிந்தன், நாயகி பூரணி ஆகிய பெயர்களை, தங்களின் குழந்தைகளுக்கு வைத்தனர்.அந்த அளவுக்கு, நா.பா.,வின் பாத்திரங்கள் வாசகர்களின் மனதை வசீகரிக்க கூடியவை.அரவிந்தனுக்கும், பூரணிக்கும் இடையே உள்ள காதல் பற்றிய அத்தியாயங்கள் எல்லாம் மிகவும் கவித்துவமான நடையில் இருக்கும்.சமூக சேவைக்காக, தன் காதலை தியாகம் செய்யும் அரவிந்தன், காதல் நிறைவேறாமல் போனதால் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல், கன்னியாக வாழும் பூரணி, அவர்களின் உணர்வுகளை விவரிக்கும் ஆசிரியரின் எழுத்தாற்றல், வாசிப்பவர்களை கலங்க வைத்துவிடும்.இந்த நாவலில், அரவிந்தன் இறந்த பிறகு பூரணி அவளது அம்மாவிடம் பேசும்போது, 'பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பு உண்டேல் அரவிந்தனை மறவாமை வேண்டும்' என்று சொல்லுவாள்.அரசியல், பொது நலம், அன்பு, கருணை என, பல விஷயங்கள் இந்த நாவலில் பின்னி கிடக்கும். நா.பா.,வின் படைப்புகளில் தன்னம்பிக்கை, மைய நாதமாக இருக்கும்.சமூக அநீதிக்கு எதிராக, இளைஞர்களை கிளர்ந்து எழச்செய்யும். அதனால் குறிஞ்சி மலர் நாவலை, இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும்.அவரது பொன்விலங்கு, துளசி மாடம், ஆத்மாவின் ராகங்கள், சாயங்கால மேகம், சமுதாய வீதி போன்ற படைப்புகளும், அவரது கட்டுரைகளும், வரலாற்று நாவல்களும் சிறப்பானவை.அவரது படைப்புகள் குறித்து, 'ஊற்றுக் கண்' என்ற பெயரில், எனது வாசக அனுபவத்தை தனி நுாலாக எழுதி இருக்கிறேன்.