ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதியின்றி அவதி
வால்பாறை: வால்பாறை அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும், போதிய அடிப்படை வசதி இல்லாததால் நோயாளிகள் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.வால்பாறை அடுத்துள்ள, முடீஸ் பஜார் பகுதியை சுற்றிலும் கெஜமுடி, முத்துமுடி, நல்லமுடி, தோணிமுடி, ஆனைமுடி, தாய்முடி உள்ளிட்ட, 14 எஸ்டேட்கள் உள்ளன. இந்த பகுதி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், முடீஸ் பஜார் பகுதியில் தேயிலை எஸ்டேட்டின் மத்தியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த, 30 ஆண்டுகளாக செயல்படுகிறது.இந்நிலையில், சுகாதார நிலையத்திற்கு செல்லும் ரோடு கரடு, முரடாக இருப்பதாலும், சுகாதார நிலையம் செல்ல தாழ்வான படிக்கட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாலும், போதிய அடிப்படை வசதி இல்லாததாலும், நோயாளிகள், கர்ப்பிணிகள் சுகாதார நிலையம் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:மருத்துவமனை வளாகம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. பகல் நேரத்திலேயே வன விலங்குகள் நடமாடுவதால், வந்து செல்லும் நோயாளிகளுக்கும், பணிபுரியும் ஊழியர்களுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.தேயிலை எஸ்டேட்டில் சுகாதார நிலையம் அமைந்துள்ளதால், போதிய வசதி இல்லாத சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட மாற்று இடத்தில் விரைவில் சுகாதார நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, கூறினர்.