மண் சரிவு, மரங்கள் விழுந்தன மலை ரயில்கள் தாமதம்
குன்னுார்: குன்னுார் பகுதியில் இரவில் கன மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம் ---–- குன்னுார் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் அருகே மண்சரிவுடன் மரங்களும் விழுந்தன. ரயில்வே பொதுப்பணித்துறை ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, 210 பயணிகளுடன், மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. மதியம் 1:30 மணிக்கு குன்னுார் வந்து சேர்ந்த ரயில், தொடர்ந்து ஊட்டிக்கு சென்றது. இதே போல, மாலையில் மீண்டும் வெலிங்டன் அருகே மரம் விழுந்தது. இதை ரயில்வே ஊழியர்கள், 45 நிமிடங்களில் அகற்றினர். இதனால், ஊட்டி–குன்னுார் இடையே இயக்கப்படும் மலை ரயில்கள் தாமதமாயின. மேலும், ‘குன்னுார் இந்திராநகர் அருகே, சப்ளை டிப்போ ரோடு, ஆடர்லி ரோடு,கோத்தகிரி மெயின் ரோடு வண்டிச்சோலை,’ என, 4 இடங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்தன. கோத்தகிரி சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னுார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் நேற்று காலை 8:00 மணிக்கு முன்னதாகவே சென்று சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். போக்குவரத்து சீரானது.