தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு
மேட்டுப்பாளையம் : காரமடை வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொழுநோய் ஒழிப்பு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதாகர் தலைமையில்,கடந்த ஜன, 30ம் தேதி முதல் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் தொழுநோய் கண்டறியும் முகாம்களை நடத்தி வருகின்றனர். வரும் 15ம் தேதி வரை இம்முகாம்கள் நடக்க உள்ளன.இதுகுறித்து, சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன் கூறுகையில், ''கட்டுமானம் நடைபெறும் பகுதிகள், மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகள், உணவுக் கூடங்களில் பணி புரியும் தொழிலாளர்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தொழுநோய் குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சி, தொழு நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தொடர்பாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தல், போலீஸ்ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசாருக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அரசு அலுவலகங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில், தொழு நோய் கண்டறியும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன,'' என்றார்.