ஊராட்சியாகவே தொடரட்டும்; கிராம மக்கள் கோரிக்கை
சூலுார்; பேரூராட்சியாக தரம் உயர்த்தும் முடிவுக்கு, அரசூர், கணியூர் ஊராட்சி மக்களும், நகராட்சியாக தரம் உயரத்தப்படும் சூலுாருடன், காங்கயம் பாளையத்தை இணைக்க, அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சியை, சூலுார் பேரூராட்சியுடன் இணைத்து, சூலூர் நகராட்சி உருவாக்கப்பட உள்ளது. இதற்கு ஊராட்சி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், கணியூர் மற்றும் அரசூரில் நடந்த, கிராம சபை கூட்டத்தில், பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசூர் கிராம மக்கள், கலெக்டரை சந்தித்து தங்கள் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டாம், என, வலியுறுத்தி மனு அளித்தனர். நீலம்பூர் ஊராட்சியில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ''எங்களின் வருமானம் குறைவு. 100 நாள் வேலை திட்டம், அரசின் திட்டங்களால் பயன் பெறும் முதியவர்கள் பலர் உள்ளனர். பேரூராட்சியாகவோ அல்லது நகராட்சியுடன் இணைப்பதால் ஏற்படும் வரிச் சுமைகளை தாங்க முடியாது. அதனால், தரம் உயர்த்தும் அறிவிப்பை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றனர்.இந்நிலையில், கிட்டாம் பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபையில், கருமத்தம்பட்டி நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட்டு, ஊராட்சியாகவே தொடர நடவடிக்கை எடுத்த, அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.