கடைக்கு வாடகை செலுத்தட்டும்; நடைபாதைக்கு அபராதம் செலுத்தட்டும்!
கோவை மாநகராட்சி, 257.04 சதுர கி.மீ., பரப்பளவில், 100 வார்டுகளுடன் அமைந்திருக்கிறது. நகரின் பிரதான ரோடுகளில், இருபுறமும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்கப்படுகிறது.அப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள், நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை பரப்பி வைத்திருப்பதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடிவதில்லை. கடைக்கு முன் ரோட்டில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.கடை வீதிக்கு வரும் பொதுமக்கள், நடைபாதையில் செல்ல வாய்ப்பில்லாததால், ரோட்டில் வாகனங்களுக்கு இடையே, சிரமப்பட்டு நடந்து செல்ல வேண்டியிருக்கிறது.உக்கடத்தில் இருந்து மில் ரோடு சந்திப்பு வரை, ஒப்பணக்கார வீதியில் ரோட்டின் இருபுறமும் உள்ள நடைபாதையை, வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.வைசியாள் வீதி மற்றும் வெரைட்டி ஹால் ரோட்டில், கடைக்குள் வைத்திருக்க வேண்டிய பொருட்களை, நடைபாதையில் அடுக்கி வைத்து வியாபாரம் செய்கின்றனர்.இதேபோல், நவாப் ஹக்கீம் சாலை, காந்திபுரம், நுாறடி ரோடு, கிராஸ்கட் ரோடு, குனியமுத்துார், சுந்தராபுரம், போத்தனுார், சிங்காநல்லுார், பீளமேடு, கணபதி, ஆர்.எஸ்.புரம், ஒலம்பஸ், ராமநாதபுரம் என, நகரின் பல்வேறு பகுதிகளிலும் நடைபாதை என்பதே இல்லை.அந்தளவுக்கு கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்களுக்கான வழித்தடத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகளின் பொறுப்பு.அகற்றுவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பதையும் தடுத்து கண்காணிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்தால் அபராதம் விதிக்க வேண்டும்.அப்படியும் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், அதிகாரிகளின் பாக்கெட் லஞ்சப்பணத்தால் நிறைகிறது என்று அர்த்தம்.