மேலும் செய்திகள்
போலீசாருக்கு பயிற்சி
22-Oct-2024
கோவை: மாவட்ட போலீஸ் சார்பில், போலீசாருக்கு உயிர்காக்கும் முதலுதவி பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விபத்து ஏற்படும் இடத்திற்கு செல்லும் போலீசார், விபத்தில் சிக்கிய நபர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில், மாவட்ட போலீஸ் மற்றும் பி.எஸ்.ஜி., மருத்துவமனை இணைந்து உயிர்காக்கும் முதலுதவி பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முகாமை, கோவை எஸ்.பி., கார்த்திகேயன் நேற்று துவக்கி வைத்தார். இதில், 800 போலீசார் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆர்வம் இருக்கும் போலீசாருக்கு அடுத்தக்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. துவக்க நிகழ்ச்சியில் எஸ்.பி., கார்த்திகேயன் பேசுகையில், ''ஒவ்வொரு விபத்து ஏற்படும் போது, களத்தில் உள்ள போலீசார் தான் முதலில் சம்பவ இடத்திற்கு செல்கின்றனர். அப்படி, விபத்து நடக்கும் இடத்துக்கு செல்லும் போலீசாருக்கு விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்க தெரிந்து இருக்க வேண்டியது அவசியம். பொது மக்களுக்கு உதவும் இது போன்ற செயல்களால் போலீஸ் துறைக்கு நற்பெயர் கிடைக்கும். உயிர் காக்கும் செயலுக்கு அரசு பதக்கம் கூட உள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அனைவரும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தயாராக இருக்க வேண்டும்,'' என்றார்.
22-Oct-2024