குடியிருப்பு பகுதியில் மதுக்கடை; ராம்நகர் பொதுமக்கள் எதிர்ப்பு
கோவை; கோவை ராம்நகரில் கோதண்ட ராமர் கோயில் மட்டுமின்றி ராஜவிநாயகர் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், சுப்ரமணியர் கோயில் என ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. இதனருகே வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி, பயிற்சி நிறுவனங்கள், உணவகங்கள், அபார்ட்மென்ட்கள், வங்கிகள், தனி குடியிருப்புகள், வில்லாக்கள் உள்ளன. ராம்நகர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு எதிரே, உணவகத்துக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான ஒரு கட்டடத்தில், டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார் அமைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்கு ராம்நகர் கோதண்ட ராமர் கோயில் பக்தர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காளிங்கராயன் சாலையில் உள்ள, இரண்டு மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி வரும் சூழலில், புதியதாக மேலும் ஒரு கடையை திறக்க முயற்சிப்பது, அப்பகுதியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோதண்டராமர் கோயில் செயலாளர் விஸ்வநாதன் கூறுகையில், ''கோதண்டராமர் கோயிலில் விழாக்காலங்களில், சுவாமி வீதி உலாவாக காளிங்கராயன் சாலையிலும், அன்சாரி வீதியிலும் மேளதாளங்கள் முழங்க வருவார். அப்பகுதியில், மதுக்கடை இருப்பது உசிதமாக இருக்காது.மக்கள் நலனை கருத்தில் கொண்டு, குடியிருப்புகள் சூழ்ந்த அப்பகுதியில் மதுக்கடை அமைக்கும் திட்டத்தை, கைவிட வேண்டும்,'' என்றார்.