கடன் அட்டை திட்டத்தில் கால்நடை பராமரிப்பு கடன்
பொள்ளாச்சி,; கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் பராமரிப்புக்கு, விவசாயிகள் கடன் அட்டை வாயிலாக சிறு கடன் பெற விண்ணப்பித்தால், ஊரக வளர்ச்சித்துறையால் வழங்கவே நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கால்நடை வளர்ப்போர் பயன் பெற, விவசாயிகள் கடன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பசு, எருமை உள்ளிட்ட கறவை மாடுகள் பராமரிப்புக்காக, ஆண்டுக்கு தலா ஒன்றுக்கு 14,000 ரூபாய்; ஆடு ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் சிறு கடன் வழங்கப்படுகிறது. அவ்வகையில், பொள்ளாச்சி கோட்டத்தில், விவசாயிகள் சிலர், கடன் பெறுவதற்கு முனைப்பு காட்டுகின்றனர்.இது குறித்து, கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:அந்தந்த பகுதி கால்நடை மருத்துவமனை அல்லது கால்நடை மருந்தகங்களுக்கு உட்பட்ட விவசாயிகள், சிறு கடன் பெற விண்ணப்பித்தால், அவர்கள் வைத்திருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை, நிலப்பரப்பு உள்ளிட்ட விபரங்களை கால்நடை ஆய்வாளர் உறுதி செய்வர்.அதற்கான படிவத்தில் கால்நடை ஆய்வாளர் கையொப்பம் மட்டுமே இடுவர். பொதுத்துறை வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் வழங்க, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வர்.ஆறு மாதங்களில் கடனை திருப்பி செலுத்துவோருக்கு வட்டி இல்லை. ஆறு மாதங்களுக்கு மேல் குறைந்தபட்ச வட்டி செலுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.