ஜாதி பெயர் சொல்லி திட்டிய நபருக்கு ஐந்தாண்டு சிறை
கோவை: கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர், கனகராஜ், 43. இவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், ஜூலை, 2024ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் வெளியில் வந்த இவர், சிறுமியின் 65 வயது பாட்டியிடம் தகராறில் ஈடுபட்டு, பொது இடத்தில் ஜாதியை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மூதாட்டி, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், கனகராஜை சிறையில் அடைத்தனர். எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவின் பேரில் வழக்கு பதியப்பட்ட மூன்று நாட்களில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, பட்டியல் ஜாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்ட நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. கனகராஜ்க்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்து, நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பளித்தார்.