உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரங்கநாதர் கோவிலில் மார்கழி மாத வைபவங்கள் துவங்கின

அரங்கநாதர் கோவிலில் மார்கழி மாத வைபவங்கள் துவங்கின

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், கார்த்திகை மாதத்தின் கடைசி நாளில், பாஞ்சராத்ர கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்கழி மாத வைபவங்கள் தொடங்கின.கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு மார்கழி மாத வைபவங்கள் நேற்று துவங்கின. தனுர் மாதம் என்னும் மார்கழி மாதத்தில், அனைத்து ஆலயங்களிலும் பக்தர்கள் அதிகாலையில் கோவிலுக்கு சென்று, சுவாமியை வழிபடுவது வழக்கம்.அந்த வகையில் காரமடை அரங்கநாதர் கோவிலில் மார்கழி மாத வைபவங்கள் துவங்கின. கோவில் நடை திறந்து, கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, எடுத்துவரப்பட்ட, புனித நீரால் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை நடந்தன.பின்பு ஆராதனை, சாற்று முறை நடந்தது. கார்த்திகை மாதத்தின் கடைசி நாளான, நேற்று முன்தினம் இரவு பாஞ்சராத்ர கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் நான்கு ரத வீதிகளில், மேளதாளம் முழங்க சப்பரத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள் முத்துசாமி, ஜெகநாதன், ஆனந்தன், கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ பாதம் தாங்கிகள் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ