மாசாணியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா: பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர அறிவுரை
ஆனைமலை; ஆனைமலையில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபி ேஷக விழா நிறைவடைந்து, 14 ஆண்டுகள் ஆவதால், மீண்டும் கும்பாபி ேஷக விழா வரும், 12ம் தேதி நடத்தப்படுகிறது. இந்நிலையில், கோவிலில் கும்பாபிேஷக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா ஆய்வு செய்தார்.வாகனங்கள் நிறுத்தப்பகுதி, வி.ஐ.பி., வி.வி.ஐ.பி., வாகனங்கள் நிறுத்தும் இடம், பக்தர்கள் வருகை, அன்னதானம் நடைபெறும் இடங்கள் குறித்து பார்வையிட்டு, போலீஸ் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, டி.எஸ்.பி., ஸ்ரீநிதி, அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து மற்றும் போலீசார் பங்கேற்றனர்.சப் - கலெக்டர் கூறியதாவது: கும்பாபி ேஷக விழாவுக்கு, நான்கு லட்சம் பேர் வரலாம் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஐந்து லட்சம் பேர் வருகைக்கு ஏற்ப, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள, போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.தேவையான இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும். இதன் கட்டுப்பாட்டு அறை, கோவில் நிர்வாகம், போலீசார் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.ஆங்காங்கே வாட்ச் டவர்கள் அமைத்து, கண்காணிப்பினை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தப்பகுதி; எவ்வளவு வாகனங்கள் நிறுத்தலாம் என்பது குறித்து கேட்டறியப்பட்டது. கோவிலுக்குள் பக்தர்கள் எந்தளவுக்கு அனுமதிக்கலாம்; உள்வருவதற்கும், வெளியேறுவதற்கும் தனித்தனி வழிகளை ஏற்படுத்திட வேண்டும்.மேலும், பக்தர்கள் வசதிக்காக பஸ்கள் இயக்கம் குறித்து, போக்குவரத்து கழகத்திடம் தகவலை பெற்று பஸ்கள் நிறுத்தப்பகுதியை உறுதி செய்திட வேண்டும். மற்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வழித்தடம் ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.குடிநீர் போதுமானதாக கிடைக்கும் வகையில், ஏற்பாடுகளை செய்திட வேண்டும். கழிப்பிட வசதிகள் ஏற்படுத்திட வேண்டும்.பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்து செல்ல, போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்து துறைகளும் இணைந்து, கும்பாபிேஷக விழா நன்றாக நடக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.