உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்: குண்டம் இறங்கி பக்தர்கள் பரவசம்

மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்: குண்டம் இறங்கி பக்தர்கள் பரவசம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள்,பூக்குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த, 11ம் தேதி மயான பூஜை நடைபெற்றது; கடந்த, 12ல் காலை, 6:00 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை, 6:30 மணிக்கு மகா பூஜையும் நடந்தது.நேற்றுமுன்தினம் காலை, 10:00 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை, 6:30 மணிக்கு சித்திர தேர் வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா சென்று, குண்டம் அருகில் தேர் நிறுத்தப்பட்டது. இரவு, 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது.விரதம் இருந்த பக்தர்கள் நேற்று காப்பு கட்டி, ஆற்றில் நீராடி அம்மனை வழிபட்டு, குண்டம் இறங்கும் இடத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளி குப்புச்சாமி, மயான அருளாளி அருண் ஆகியோர் கோவிலிலிருந்து, அம்மனின் சூலத்துடன் கோவிலை வலம் வந்து, குண்டம் இறங்கும் இடத்திற்கு சென்றனர். பின், காலை, 8:30 மணிக்கு மேல் குண்டம் திருவிழா துவங்கியது.முதலில், முறைதாரர் மற்றும் அருளாளி குண்டம் இறங்கினர். அவர்களை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'மாசாணி தாயே' என கோஷம் எழுப்பியபடி குண்டத்தில் இறங்கி வேண்டுதல் மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.விரதம் இருந்த போலீசார், ஊர்க்காவல் படையினர்உள்ளிட்டோரும் குண்டம் இறங்கி வழிபாடு நடத்தினர்.குண்டம் இறங்குவதை காண குவிந்த பக்தர்களும், 'மாசாணி தாயே... அருள் புரிவாய்,'' என கோஷம் எழுப்பினர்.ஆண்கள் குண்டம் இறங்கி முடித்ததும், பெண்கள் குண்டத்திலிருந்த 'பூ'வை கைகளில் அள்ளி கொடுத்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், எம்.பி.,க்கள் ஈஸ்வரசாமி, கணபதி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் வேலுமணி,எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், கோவை முன்னாள் மேயர் வேலுச்சாமி, கோவில் உதவி ஆணையர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.எஸ்.பி., கார்த்திக்கேயன், டி.எஸ்.பி., ஸ்ரீநிதி தலைமையில், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை