மசனியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே சென்னிவீரம்பாளையத்தில் உள்ள மசனியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.காரமடை அடுத்த சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னிவீரம்பாளையத்தில் மசனியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை, பிள்ளையார் வழிபாடுடன் தொடங்கியது. மாலையில் தீர்த்த குடங்களும், முளைப்பாரிகளையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன் பின்பு முதல் யாக வேள்வி பூஜை நடந்தது. 108 மூலிகைகளால் மூல மந்திர வேள்வி பூஜை செய்தனர். நேற்று காலை, 7:00 மணிக்கு திருப்பணி எழுச்சியும், அதைத்தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி பூஜையும் நடந்தது. தீர்த்த குடங்களை யாகசாலையிலிருந்து ஊர்வலமாக கோவில் சுற்றி எடுத்து வந்தனர். பின்பு, 9:30 மணிக்கு கோபுர கலசத்தின் மீதும், மூலவர் அம்மன் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.