மாணவர்களின் கற்றல் அடைவு திறன் அளவீடு; அரசு பள்ளிகளில் ஸ்லாஸ் தேர்வு
பொள்ளாச்சி; அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் அடைவு திறனை அறிந்து கொள்ளும் வகையில், 'ஸ்லாஸ்' தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் படிக்கும், 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடும் வகையில் அடைவு தேர்வுகள் கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்படுகிறது.அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நடப்பாண்டுக்கான 'ஸ்டேட் லெவல் அச்சீவ்மென்ட் சர்வே' எனப்படும், 'ஸ்லாஸ்' தேர்வு, கடந்த, 4ம் தேதி, 3ம் வகுப்பிற்கும், 5ம் தேதி 5ம் வகுப்பிற்கும், நேற்று, 8ம் வகுப்பிற்கும் நடத்தப்பட்டது.இதற்காக, ஒவ்வொரு வகுப்பிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்வானது, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தின் கீழ், மல்டிபில் சாய்ஸ் வினா முறையிலும் நடத்தப்பட்டது.அதில், குறிப்பாக, 8ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள், 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவும் உள்ளது.இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்து திறனை அளவிடுவதற்காக, ஆண்டுதோறும் 'ஸ்லாஸ்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக, வட்டார வள மையம் வாயிலாக, கல்லுாரி மாணவ, மாணவியர் கண்காணிப்பாளராக நியமிக்கப்படுகின்றனர்.அவர்கள் உரிய பயிற்சி பெற்று, இந்த தேர்வை நடத்தி முடிகின்றனர். அதன்பின், அந்த விடைத்தாள்கள், அந்தந்த வட்டார வள மையத்திடம் ஒப்படைக்கப்படும். அங்குள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள், விடைத்தாளை திருத்தி மதிப்பெண் விபரத்தை, 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்வர்.மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும்.அப்பகுதியில் உள்ள பள்ளிகளில், கற்பித்தலையும், மாணவர்களின் கற்றல் திறனையும் மேம்படுத்த திட்டமிடப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.